எதிர்க்கட்சியாக இருந்தால் “கோ பேக்”, ஆளும் கட்சியாக இருந்தால் “வெல்கம்”: சீமான்

ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, “சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்”ன்னு இப்படியே இவங்க சொல்லிட்டு இருக்காங்க. ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? என்று திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார் சீமான்.

கடந்த முறை, ஈரோட்டில் நடந்த தேர்தலில் வாக்குப்பதிவில் 7.65 சதவீத வாக்குகளை பெற்று 3ம் இடத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி. எனவே, இந்த முறை, அடுத்தக்கட்டத்துக்கு உயர போவதாக சீமான் சொல்லி வருகிறார். அதேசமயம், நாம் தமிழர் வேட்பாளர் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் வாக்காளர்களைப் பெரிதும் கவனம் பெற்று வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாக செல்லாமல், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2 நாட்களாக சீமான் செய்த பிரச்சாரமும், மேடைப்பேச்சும் இணையத்தில் மிகுந்த கவனத்தை பெற்று வருகின்றன. அத்துடன் தொகுதி மக்களையும் வெகுவாக ஈர்த்து வருகின்றன. நேற்றுகூட சீமான் பேசிய பேச்சு இணையத்தில் சீமானின் தம்பிகளால், ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் சீமான் பேசியதாவது:-

நான் ஒருத்தன் உங்களுக்காக நிற்கிறேன். ஆனால் நீ என்னைய தவிர எல்லாருக்கும் ஓட்டுப்போடுறே. நான் உங்களிடத்திலே சொல்லுகிறேன், “நான் இந்த நாட்டுக்கானவன், என் நாட்டு மக்களின் நலனுக்கானவன்”. எப்பவுமே என் மாமன், மைத்துனர் எல்லாம் என்னை நோன்பு கஞ்சிய குடிக்க கூப்பிடுவாங்க.. ஆனால், நான் போகமாட்டேன்.. வரமாட்டேன்னு சொல்லிடுவேன். “ஒருநாள் முஸ்லிம் வேலை”யை என்னால பார்க்க முடியாது.. அந்த வேஷத்தை என்னால போட முடியாது. மச்சானை வீட்டுக்கு அனுப்பு சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிடுவேன். ஏன் என்றால், “நான் உன் உணவுக்கானவன் அல்ல.. உன் உணர்வுக்கானவன்.. உன் உரிமைக்கானவன்.. உன் உயிரானவன்” தொழுகைக்கு நேரமாச்சு நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு, இல்லாட்டி போ.. திமுகவுக்கே போட்டுக்கோ.. ஆனால், மறுமையில் இறைவன்கிட்ட நீ பதில் சொல்லிக்கோ..

ஒரு பெரியவர், தன் 5 வேளை கடமையை சரியாக செய்வார்.. இறைவனிடத்தில் தவறாமல் தொழுபவர்.. ஒருநாள் அதிகாலை, பள்ளிவாசலிலேயே படுத்து தூங்கியிருக்கிறார்.. அப்போது ஒருவர் வந்து “எழுந்திருங்க, தொழுகைக்கு நேரமாகுது, கிளம்பி போங்க என்று எழுப்புகிறார். அந்த பெரியர் அசதியால் மறுபடியும் 5 நிமிஷம் தூங்கிவிடுகிறார். ஆனால், அந்த நபரோ, பெரியவரை மறுபடியும் வந்து எழுப்பி, தொழுகைக்கு போக சொல்கிறார். பெரியவரும் எழுந்து போய் தொழுதுவிட்டு, திரும்பி வந்தால், அந்த நபர் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறார். அவரிடம் சென்ற பெரியவர், “நீ யார், என் கடமையை செய்வதற்க்கு, நீ கடமை தவறாமல் என்னை தட்டி எழுப்பிவிட்டாயே” என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், “நான்தான் சாத்தான், பேய்.. நீ தூங்கி எழுந்து தாமதமாக போய் வருந்தி தொழும்போது, இறைவன் உனக்கு இரக்கம் காட்டிவிடக்கூடாது, உனக்கு அருள் பாலித்துவிடக்கூடாது. அதனால்தான் உன்னை சரியான நேரத்துக்கு எழுப்பி தொழுகைக்கு அனுப்பினேன்” என்கிறார். அதாவது, அந்த சாத்தான்தான் இந்த தொகுதியில் இப்போது 2 கட்சியாக நின்று போட்டியிடுட்டு கொண்டிருக்கின்றன. அந்த சாத்தான் அக்கறையில்தான் உன்னை எழுப்பிவிடுகிறது என்று நீ நினைக்கிறாய். இல்லவே இல்லை, உனக்கு நல்லது நடந்துடக்கூடாது அதனால்தான் எழுப்பியது.

எப்ப பார்த்தாலும், “சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்”-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா எரியும்?

இப்போ இந்த முறை அந்த ஆட்டம் செல்லுபடியாகல. ஏன்னா, பிஜேபிதான் இந்த முறை இங்கே போட்டியிடலையே. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த ஏமாற்று? ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, “சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்”ன்னு இப்படியே இவங்க சொல்லிட்டு இருக்காங்க.. ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் “கோ பேக்”? ஆளும் கட்சியாக இருந்தால் “வெல்கம்”? இந்த நாடகத்தை எல்லாம் நம்பி நம்பி நீங்க ஏமாந்து போகாதீங்க.. அவ்ளோதான் நான் சொல்வேன். இவ்வாறு சீமான் பேசினார்.