தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் ஒரு தமிழ்நாட்டு மீனவரை காணவில்லை.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அண்டை நாடான இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது; தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மீது அண்டை மாநிலமான ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு தமிழ்நாடு மீனவர்கள் காவிரியும், பாலாறும் கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை. இதனால் கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வருகிறார்கள்.

பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று மாலை கர்நாடக வனத்துறையினர் பரிசல் மூலம் பாலாற்றங்கரையில் துப்பாக்கி சூட்டில் யாரேனும் பலியாகி நீரில் மூழ்கியுள்ளனரா எனத் தேடிப் பார்த்து சென்றுள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பதட்டமான சூழல் நிலவி வருவதால் பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனை சாவடிக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கை தமிழ் மீனவர்களும் பாரம்பரியமாகவே இணைந்து மீன்பிடித்தனர். இதன் சாட்சியமாகத்தான் இன்றும் இருக்கிறது கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம். தமிழ்நாட்டு மீனவரால் கட்டப்பட்டது அந்தோணியார் தேவாலயம். கச்சத்தீவு தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது; பொருட்கள் மட்டுமேயான பண்டமாற்று சந்தையாக இல்லை. தமிழ்நாட்டு உறவுகளிடம் இருந்து பெண் எடுப்பதற்கும், பெண் கொடுப்பதற்குமான ஒரு திருவிழாவாக கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இருந்தது என்பது ஒரு காலம்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத்தீவு எல்லையே மயான தீவாகிப் போனது. கச்சத்தீவு எல்லையில் மீன்பிடித்தார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையின் சிங்கள ராணுவம் சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது. மொத்தம் 800 மீனவர்கள் இனப்படுகொலை செய்ய்யப்பட்டிருக்கின்றனர். இந்த அநீதியை தட்டிக் கேட்கத்தான் எந்த ஒரு நாதியும் இல்லாமல் தமிழ்நாட்டு தமிழினம் கையறு நிலையில் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது. அண்டைநாடான இலங்கை தான் இப்படி வேட்டையாடுகிறது என்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரா போலீசாரும் இப்படி ஒரு ஈவிரக்கமற்ற மனிதப் படுகொலையை நிகழ்த்தினர். செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி 20 தமிழ்நாட்டு தொழிலாளர்களை ஆந்திரா வனப்பகுதியில் காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்து வீசியது. இந்த பச்சைப் படுகொலையை கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதியை பெற்றுத்தரவோ எந்த ஒரு ஜீவனும் ஆபத்பாந்தவனாய் தமிழருக்கு இன்று வரை கிடைக்கவில்லை.

இந்த துயரங்களுக்கு நடுவே இப்போது கர்நாடகா வனத்துறையும் தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி இருக்கிறது. சேலம் மேட்டூர் அருகே பாலாற்றில் தமிழ்நாட்டு மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித்ததைக் கூட கர்நாடகாவால் பொறுக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களைத் தடுத்துக் கொண்டே வந்த கர்நாடகா இப்போது துப்பாக்கித் தோட்டாக்களை சீற வைத்திருக்கிறது. கர்நாடகாவின் இந்த படுகொலை ஆட்டத்துக்கு ஒரு தமிழ்நாட்டு மீனவர் பலியாகி இருக்கிறார்.