மதுக்கடைகளை மூட திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மதுக்கடைகளை மூடுவோம் என்ற சொன்ன திமுக, இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 164வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு இன்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிறது. உலகிலேயே இதுபோன்ற ஒரு தேர்தல் நடந்ததில்லை. 1980களில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட போது, திமுக – காங்கிரஸ் கூட்டணியின் போது, காங்கிரஸ் கட்சிக்கு சரிபாதி தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது. இதனைவிட உரிமைகளை விட்டுக் கொடுத்து, கொத்தடிமை கூட்டத்தை யாருமே பார்த்ததில்லை. இதுகுறித்து கனிமொழி, கருணாநிதியிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டும். பதவி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, திமுக செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடத்தப்பட்டால், யாரிடம் புகார் அளிக்க முடியும். அதனால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். இதுதொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கர்நாடகா வனத்துறையால் மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றிய கேள்விக்கு, திமுக அரசு எந்த விவகாரத்தில் அழுத்தமான நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை கடற்படையால் மீனவர்கள் சுடப்பட்டால், அதிமுக தரப்பில் உடனடியாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கவில்லை. எங்கள் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வனத்துறையினரை கைது செய்யவில்லை என்றால் பெரியளவில் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? ஆனால் ஸ்டாலின் அப்படி சொல்லவில்லை. தமிழ்நாடு பற்றி கவலையில்லை.

எப்படியும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும். அப்படி தோல்வியை சந்தித்தால், காங்கிரஸ் கட்சி மீது பழியை போடுவார்கள். ஆனால் அதிமுகவில் கூட்டணி தர்மம் பின்பற்றப்படுகிறது. இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் அதிமுக உணர்ச்சிப்பூர்வமாக பணியாற்றி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தபால் வாக்குகளில் கூட அத்துமீறல் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மதுக்கடை மூடாதது பற்றிய கேள்விக்கு, அதிமுக படிப்படியாக மட்டுமே மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னது. ஆனால் திமுக தான் மதுக்கடைகளை உடனடியாக மூடுவோம் என்று அறிவித்தது. இப்போது மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்தார்.