ஜனாதிபதி திரௌபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார். ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அங்கு மீனாட்சியம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்துவிட்டு அங்கிருந்த சிற்ப கலையை கண்டார். பின்னர் நாய்க்கர் மகால் மண்டபத்தையும் ரசித்தார். முன்னதாக திரௌபதி முர்முவுக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. கோயிலில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை நெற்றியில் வைத்துக் கொண்ட முர்மு, அங்கிருந்த தெப்பக்குளத்திற்கு முன்பு தனது மகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அவருக்கு மீனாட்சி அம்மன் குங்குமமும் அம்மனின் சிலையும் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் அழகர்கோவில் ரோடு சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு காரில் புறப்பட்டார். அந்த வழியாக குடியரசுத் தலைவர் வருவதை அறிந்த மக்கள் அப்பகுதிகளில் குவிந்தனர். அவரை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடினர். இதையடுத்து தெற்கு ஆவணி மூல வீதி வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது அங்கு வெயிலில் கால் கடுக்க நிறைய மக்கள் நிற்பதை கண்டார். உடனே ஓட்டுநரிடம் சொல்லி காரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். உடனே காரை விட்டு இறங்கிய திரௌபதி முர்மு, அங்கிருந்த மக்களை பார்த்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னார். உடனே மக்களும் வணக்கம் கூறி ஆர்ப்பரித்தனர். இதையடுத்து காரில் ஏறி அமர்ந்து தனது பயணத்தை தொடர்ந்தார். முர்முவின் இந்த செயலை பார்த்த மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்து வருகிறார்கள். மக்களை பார்த்ததும் முர்மு காரிலிருந்து இறங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் காரில் இருந்து இறங்கியதால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.