கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் தான் கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்த ராஜா வழக்கம்போல் செட்டிப்பட்டி ரவி உள்ளிட்டோருடன் மீன் பிடிக்க சென்றுள்ளார். அடிபாலாறு பகுதியில் அவர்கள் சென்ற நிலையில் கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் பயந்த மீனவர்கள் அங்கிருந்து ஓடினர். ராஜாவுடன் மீன்பிடித்த அனைவரும் வீடு திரும்பிய நிலையில் அவர் மட்டும் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் அவரின் உடல் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் பாலாற்றில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையை நடத்தி வருகின்றனர். மான் வேட்டையாட சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கர்நாடகா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தமிழக – கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு செக்போஸ்ட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகளவு போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் கண்டனம் மேலும் ராஜா உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேநேரம், கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடுமையான கண்டனங்களையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கர்நாடகா வனத்துறைக்கு தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.