பிரபாகரன் இறந்துவிட்டதாக 10 முறை இலங்கை அரசு பொய்யான தகவலை பறப்பி ஈழத் தமிழர்களின் மன உறுதியை குலைக்க முயன்றதாக உலகத் தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் தெரிவித்து உள்ளார்.
பிரபாகரன் ஏன் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதற்கான சில காரணங்களை பழ.நெடுமாறன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதல் முறையாக யூடியூப் சேனலுக்கு அவர் நேர்காணல் வழங்கி இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
பிரபாகரன் நன்றாக இருக்கிறார். 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் அவர் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது. இது முதல் தடவை அல்ல. 1984 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இதுபோல் 10க்கும் மேற்பட்ட முறை சிங்கள அரசும், சிங்கள ராணுவம் இவ்வாறு அறிவித்து உள்ளார்கள். எதற்காக இதை செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. உலகம் முழுவதும் இருக்கிற ஈழத் தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் மன உறுதியை குலைக்க வேண்டும். அவர்களை அச்சமடைய செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பொய் செய்தியை தொடர்ந்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
திரும்பத் திரும்ப அவர்கள் ஒரே செய்தியை சொல்கிறார்கள். ஒரு வாரம், 10 நாளில் அது பொய்த்துப்போகிறது. மீண்டும் அதை பரப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள தடயவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் டாக்டர் சந்திரசேகரன். சென்னை தடயவியல் நிலையத்தில் இயக்குநராக இருந்தவர். பிரபாகரனின் உடலை நாங்கள் கண்டெடுத்தோம் என 20 ஆம் தேதி 11 மணிக்கு அறிவிக்கிறார்கள். 11:30 மணிக்கு டிஎன்ஏ, தடயவியல் சோதனை செய்துவிட்டோம். அவரது உடல்தான் என உறுதிசெய்துவிட்டோம் என அறிவித்தார்கள். அறிவித்தது சாதாரணமான ஆள் அல்ல. சிங்கள ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த பொன்சேகா அறிவித்தார். அப்போது டாக்டர் சந்திரசேகர் பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். டிஎன்ஏ சோதனையை ஒருநாளில் செய்ய முடியாது. 4 நாட்களாகும். எனவே அதை உண்மை என்று நம்ப முடியாது. டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்றால் அவர்களின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், பிள்ளைகளின் ரத்தத்தை எடுத்து ஒப்பிட்டு பார்த்து செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமானது என்றால் இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்யும் வசதியே கிடையாது. சென்னையில் உள்ள எங்கள் நிலையத்துக்குதான் அனுப்புவார்கள். நாங்கள்தான் அதை சோதனை செய்து அனுப்புவோம். என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அவர்கள் சொன்னது பொய் என்று. இன்று வரை டிஎன்ஏ செய்யும் வசதியே கிடையாது. தமிழர்களின் மன உறுதியை குலைக்க வேண்டும் என்பது அவர்கள் தந்திரம்.
அடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரை சேர்த்துள்ளார்கள். ஒருவர் இறந்துவிட்டார் என்றால் மரண சான்றிதழ் கொடுத்து அந்த பெயரை நீக்கிவிடுவார்கள். பிரபாகரனை கொன்றதாக சிங்கள அரசு பகிரங்கமாக அறிவித்துவிட்டது அல்லவா? ஏன் மரண சான்றிதழ் கொடுக்கவில்லை. ஏன் பிரபாகரன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் நீக்கப்படவில்லை.
இந்திய அரசு அமைத்த பல்நோக்கு விசாரணை குழு இன்னும் அதை விசாரித்துக்கொண்டு இருக்கிறதே. இதெல்லாம் என்ன நாடகம். பிரபாகரன் இறந்ததை சிங்கள அரசும் நம்பவில்லை. இந்திய அரசும் நம்பவில்லை. அதுதானே உண்மையாக இருக்க முடியும்.
நான் பிரபாகரனிடம் அனுமதி வாங்கியதாக சொல்லவில்லை. அவரது குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு வந்த தகவலை வெளியிடுகிறேன். நான் அவரை நேரில் பார்க்கவில்லை. இந்த நவீன யுகத்தில் விஞ்ஞானம் முன்னேறி உள்ளது. நான் தொலைபேசியில் பேசினால் எங்கு இருந்து பேசுகிறேன் என்று கண்டுபிடித்துவிட முடியும். அவர் என்னிடம் பேசினாலும், நான் அவரிடம் பேசினாலும் உடனடியாக தெரியும். யாருக்கு தெரியக்கூடாதோ அவர்களுக்கும் தெரியும். நவீன அறிவியல் பற்றி எதுவும் தெரியாமல் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.