ஏக்நாத் ஷிண்டே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு பழிதீர்ப்போம்: உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனாவின் பெயரும், சின்னமும் சொந்தம் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த தீர்ப்பை, ஜனநாயகப் படுகொலை என உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு இது தற்காலிகமாக கிடைத்த வெற்றிதான் என்றும், துரோகத்துக்கு விரைவில் பழிதீர்ப்போம் எனவும் உத்தவ் தாக்கரே ஆவேசமாக சூளுரைத்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியமைக்க தயாரானது சிவசேனா. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வைத்த கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதனால் அக்கட்சியுடனான கூட்டணியை உடைத்த உத்தவ் தாக்கரே, தனது கொள்கையுடன் முற்றிலும் மாறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த சூழலில், உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, திடீரென உத்தவ் தாக்கேரவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இந்துத்துவா கொள்கைகளை உத்தவ் தாக்கரே விட்டுக்கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, 35 சிவசேனா எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக நின்றனர். முடிவில், தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். இதனிடையே, உண்மையான சிவசேனா நாங்கள்தான் என இரு அணிகளுக்கும் இடையே பிரச்சினை எழுந்து வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை நேற்று விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அவர்களுக்கு வில் அம்பு சின்னமும் சொந்தம் என அதிரடியாக அறிவித்தது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? இது முழுக்க முழுக்க ஜனநாயகப் படுகொலை. இனி யார் வேண்டுமானாலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி முதல்வராகவோ, பிரதமராகவோ ஆக முடியும் என்ற தவறான முன்னுதாரணத்தை இந்த தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அவர்கள் (ஷிண்டே அணி) சிவசேனாவின் சின்னத்தை திருடிவிட்டனர். ஒருமுறை துரோகம் செய்தவன் எப்போதுமே துரோகியாகவே இருப்பான் என பழமொழி உண்டு. அதற்கு உதாரணமாக மாறிவிட்டார் ஷிண்டே. தான் செய்த திருட்டுக்கு தற்காலிகமாக வெற்றி கிடைத்திருப்பதால் ஷிண்டே இன்று மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்காது. துரோகத்துக்கு நிச்சயம் நாங்கள் பழிதீர்ப்போம். சிவசேனாவை மீட்க தொடர்ந்து போராடுவோம். பொறுத்திருந்து பாருங்கள் ஷிண்டே. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று இரவு மும்பையில் உள்ள பால் தாக்கரேவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பால் தாக்கரேவின் ஆசிர்வாதத்தால்தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அவரது ஆசியுடனே நாங்கள் அரசை அமைத்தோம். பால் தாக்கரேவின் சித்தாந்தங்களையே முன்னெடுத்து செல்கிறோம். எனவேதான், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். கொண்டாடுகிறோம்” என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.