ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்!

டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் பெரியார் படத்தை அவமதித்தும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனங்கள் வலுத்துள்ளது.

ஜேஎன்யூ பலக்லைக்கழக வளாகத்தில் நேற்று மாலை மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன், சோலங்கியின் தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். அதை தொடர்ந்து அங்குள்ள மாணவர் செயற்பாட்டு மன்ற அறையில் 100 பிளவர்ஸ் என்ற மாணவர் அமைப்பினர் திரைப்படம் ஒன்றை திரையிட முயன்றனர். அப்போது உள்ளே புகுந்த ஏபிவிபி மாணவர்கள் அவர்களை தடுத்ததோடு எந்த படத்தையும் திரையிட கூடாது என்று எச்சரித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாணவர் மன்ற செயல்பாட்டு அறையில் இருந்த பெரியார், காரல் மார்க்ஸ், லெனின் உருவப்படங்களை ஏபிவிபி அமைப்பினர் உடைத்துள்ளனர். அவர்களை தட்டி கேட்ட தமிழ் நாசர் உள்பட 3 தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி-யினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அதை தடுத்த ஏபிவிபி மாணவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மாணவர் செயற்பாட்டு மன்ற அறையில் சாவர்க்கர் பெயரை எழுதிவைத்த ஏபிவிபி மாணவர்கள் இடதுசாரி அரசியல் பேசக்கூடாது என்றும் எழுதிவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த வாரம் மும்பை ஐஐடி-யில் தர்ஷன், சோலங்கி என்ற முதலாம் ஆண்டு பி.டெக் மாணவர் 7 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். சாதிய பாகுபாட்டால் சோலாங்கி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்திற்கு நீதிகேட்டு டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் பேரணி நடைபெற்றது. இதற்கு போட்டியாக சத்திரபதி சிவாஜியின் படத்தை வைத்து அவரது பிறந்தநாளான ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பினர் ஏபிவிபி கொண்டாடியதே இந்த மோதலுக்கு ஆரம்பப்புள்ளி என்று கூறப்படுகிறது. சிவாஜி படத்தை இடதுசாரி மாணவர்கள் உடைத்ததே பிரச்சனைக்கு காரணம் என்று ஏபிவிபி அமைப்பினர் குற்றம் சாட்டினர். பெரியாரின் படத்தை உடைத்ததோடு அதை தட்டிக்கேட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ஏபிவிபி அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளதாவது:-

நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது. இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப்பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் விவாதங்கள் நடப்பதும், சமூகநீதி,பெண்ணுரிமை, சமத்துவம், மதச் சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட கோட்பாடுகள் பற்றி மாணவர்களிடையே கருத்தரங்கம், பயிலரங்கம் நடப்பதும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன.

2014 இல் மோடி தலைமையில் ஒன்றிய பா.ஜ.க அரசு அமைந்த பின்னர் ஜே.என்.யூ இந்துத்துவ மத வெறிக் கும்பலின் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. மற்றும் இந்துந்துவ குண்டர்கள் ஜே.என்.யூ வில் அத்துமீறி நுழைந்து, முற்போக்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், குறிப்பாக இஸ்லாமிய, தலித் மாணவர்களை இலக்காக வைத்து வன்முறையை ஏவுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இதற்கு ஜே.என்.யூ நிர்வாகமும் துணை போகிறது.

நேற்று பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுஉடைமைத் தலைவர்களை இழிவுபடுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன்முறையை ஏவி, தந்தை பெரியார் திருவுருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு மாணவர் பிரவீன் இதே காவிக் கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்த மாணவர்கள் ஜேஎன்யூவில் தொடர்ச்சியாக சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள். ”ரிசர்வேசன் கிளப்” என்ற பெயரில் சமூகநீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

பல்கலைக் கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர் நாள், புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து இயங்கியவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. கூட்டத்துக்கு ஆதரவாகவே இயங்குகிறது. தமிழ்நாடு அரசும், புதுடில்லியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

டில்லியில் சட்டம் – ஒழுங்கு நிலை எப்படி சந்தி சிரிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டியவர் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாதான். தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல – உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர். எரிமலையைச் சீண்ட வேண்டாம் – எச்சரிக்கை! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதாவது:-

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை! பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது; அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.