மோடியின் சலுகையால் தான் இரட்டை இலை கிடைத்தது: திருமாவளவன்

எதிர்கட்சியாக கூட அதிமுக களத்தில் இல்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணை செயலாளர் செல்வம். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இவரது இரு மகள்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து விடுலை சிறுத்தை கட்சி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகி்றது. அவர் வெற்றி உறுதி, குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என நம்புகிறேன். அதிமுகவை பொறுத்தவரை இரட்டை சிலைசின்னம் என்கிற ஒரே ஒரு சாதகமான கூர் இருகிறது, மற்றபடி அக்கட்சி எதிர்கட்சியாக கூட களத்தில் இல்லை என்பது தான் உண்மை. இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார்.

பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள், ஜாதி மற்றும் மதத்தை தூண்டுவதும், தேசிய தலைவர்களை அவமதிப்பதும், திருவள்ளுவர் போன்ற இலக்கிய ஆளுமைகளை மதம் எனும் பெயரில் அடையாளப்படுத்த முயற்சிப்பதும், திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளாக உள்ளது. வடமாநிலங்களில் இது போன்ற மதம், கடவுள் பெயர்களை வைத்து இந்துக்களுக்கு நாங்களே பாதுகாப்பு என்கிற மாயை உருவாக்கி அரசியல் செய்து வருகிறார்கள். அதே உத்தியை தமிழகத்திலும் கையாள்கிறார்கள். சிவகங்கையில் பாஜவை சேர்ந்தவர், அவரது வீட்டில் அவரே நாட்டுவெடிகுண்டு வீசிவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு விடுதலை சிறுத்தைகளால் ஆபத்து உள்ளதை போல் தோற்றத்தை உருவாக்கி, கீழ்தரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீதும் புகார் கொடுத்துள்ளோம். விசாரணையில் அவரே தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதும், அது வெடிக்கவில்லை என தெரியவந்தது.

அதேபோல் தான் பாஜகவினர் வட இந்திய மாநிலங்களில் இந்து கோவில்களில் மீது வெடிகுண்டு வீசிவிட்டு இஸ்லாமியர்கள் வீசினார்கள் என பழி சுமத்தி இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் மோதல் உண்டுபண்ணிய சான்று ஏராளம் உண்டு. அதே பானியை தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க பார்க்கிறார்கள், அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது மேடைகளில் நான்காம் கட்ட பேச்சாளர் மாதிரி கீழ்தரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் அரசு வேடிக்கை பார்க்ககூடாது. சமூக பதட்டத்தை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து குளிர்காய பார்க்க நினைக்கும் சங்பரிவார் கும்பலை முன் எச்சரிக்கையாக அடையாளம் கண்டு அவற்றை தடுக்க வேண்டும் என விசிக சார்பில் கேட்டுகொள்கிறோம்.

தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டிற்கு சென்றுவிட்டது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்றவை கூட சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. வருமானவரித்துறை, அமலாக்கதுறை, சிபிஐ போன்றவையும் பாஜக அரசின் ஏவலுக்கு வேலை செய்யும் துறைகளாக மாறி உள்ளது. அதனால் தான் குஜராத் கலவரத்திற்கும், கோத்ரா ரயில் சம்பவத்திற்கும் மோடி தான் காரணம் என ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது. புலனாய்பு துறை அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மைகளை வெளியே கொண்டு வரமுடியும். தங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று பார்க்காமல் அச்சுறுத்தாமல் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுகவை நான்காக உடைத்த பாஜக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தனது கட்டுபாட்டில் வைத்து ஆட்டிப்படைக்கிறது. இரட்டை இலை சின்னம் வழக்கில் தற்போதைய நிலையில் மோடி அரசு இபிஎஸ்க்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. மோடி அரசு சலுகையில் தான் இபிஎஸ்-க்கு தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதே போல் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டேவிற்கு வில்அம்பு சின்னம் மற்றும் கட்சி உரிமையையும் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இது முழுக்க மோடி, சங்கபரிவார் அமைப்பின் தலையீடு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.