2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி, குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குஜராத்தில் மதக்கலவரத்துக்கு வழிவகுத்தது. ரயில் பெட்டி எரிக்கப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவா்களில் சிலா் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு கடந்த ஜனவரி இறுதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டதாவது:-
ரயில் பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெட்டி மீது தாங்கள் கற்களை மட்டுமே வீசியதாக ஜாமீன் கோரியுள்ள குற்றவாளிகள் தெரிவித்துள்ளனா். ஆனால் பயணிகளை வெளியே வர முடியாதபடி செய்து பெட்டிக்குத் தீவைத்து கற்களை வீசினால், அந்தச் செயலை கல்வீச்சாக மட்டும் கருத முடியாது என்று கூறி, ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து ஜாமீன் மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு மாநில உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், குஜராத் அரசு இவ்வாறு வலியுறுத்தியிருக்கிறது.
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளின் ஜாமீன் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் மீது பதிலளித்த குஜராத் அரசு இவ்வாறு கூறியிருக்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு. இதில் குழந்தைகள், பெண்கள் என 59 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர் என்று குஜராத் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.