திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கக்கூடியவர் துரை. ரவுடி துரைக்கு எதிராக 5 கொலை வழக்கு உள்பட 64 வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தேடப்படும் குற்றவாளியாக துரைராஜ் உள்ளார். அதேபோல், இவரது சகோதரர் சோமசுந்தரம் என்பவரும் இவருக்கு உடைந்தையாக இருந்துள்ளார். இருவரும் இணைந்து பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரு ரவுடிகளையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். இருவரையும் உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர் சிற்றரசு ஆகியோர் இன்று ஜீப்பில் வைத்து அழைத்து வந்தனர். அப்போது திருச்சி குழுமாயி அம்மன் கோவில் அருகே வந்த போது ஜீப்பை ஓட்டி வந்த காவலரின் கழுத்தை ரவுடி துரை ராஜ் நெறித்துள்ளார். இதில் ஜீப் நிலை தடுமாறி சாலையின் ஓரம் இறங்கிவிட்டது.
இந்த சமயத்தை பயன்படுத்தி இரு ரவுடிகளும் ஜீப்பில் ஏற்கனவே இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி காவலர் சிற்றரசு என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்று இருக்கின்றனர். உடனடியாக காவல் ஆய்வாளர் மோகன், இரண்டு ரவுடிகளையும் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். தற்போது இரு ரவுடிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற குழுமாயி கோவில் பகுதி அருகே திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சத்திய பிரியா, “மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்க சென்ற போது குற்றவாளிகள் தப்ப முயன்றனர். போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்ததால் துப்பாக்கியால் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார்.