மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு நேரடியாக சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று (22.2.2023), மன்னார்குடி நகராட்சியில் 26.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2021-22ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், மன்னார்குடி நகராட்சி, காமராஜர் பேருந்து நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மன்னார்குடி புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்காக 26.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக பேருந்து நிலையத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள நகராட்சி கடைகள் காலி செய்யப்பட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்து நிறுத்தங்கள், 117 புதிய கடைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் ஆகியவை அமைக்கப்படும்.

இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலுவின் மகள் பி.உதயா-டாக்டர் கே.துரையரசன் ஆகியோரது திருமணம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அறிவித்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டோம் என்று தவறான கருத்தை பதிவுசெய்ய விரும்பவில்லை. 5 வருடம் என்பதால், 5 வருடம் பொறுத்திருங்கள் என்று சொல்லவரவில்லை. மீதம் இருக்கக்கூடிய திட்டங்களையும், விரைவில் நிறைவேற்றக்கூடிய ஆட்சியாகத்தான் இந்த ஆட்சி இருக்கும். தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என்று சொன்னோம். ஆட்சிக்கு வந்த உடனே பட்ஜெட் வெளியிட்டு, அதற்கடுத்த நாளே விவசாயிகளுடைய பட்ஜெட்டை வெளியிட்டோமா? இல்லையா?. இந்த ஆண்டும், விவசாயிகளுக்கென்று பட்ஜெட் அறிவிக்கப்பட இருக்கிறது. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை, சலுகைகளை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய வகையில்தான் இந்த ஆட்சி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த 11-ந் தேதி ரூ.106 கோடியில் 106 நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தேன். நேற்று (நேற்று முன்தினம்) கூட, திருவாரூரில் இருக்கக்கூடிய நெல் சேமிப்பு கிடங்குக்கு ஆய்வுக்காக சென்றேன். அதேபோல, ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்து, ஒவ்வொரு மண்டலமாக சென்றுக்கொண்டிருக்கிறேன். 3-ம் கட்டமாக வருகிற 5-ந் தேதி தேதி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்போகிறேன். அதேபோல தஞ்சை, திருவாரூருக்கும் வரப்போகிறேன். ஏதோ திட்டங்களை அறிவித்துவிட்டோம். அது நடந்துவிடும் என்று ஓய்வெடுத்து, ஒதுங்கி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அது எப்படி நடக்கிறது, ஏன் நடக்கவில்லை என்பதையும் கூர்ந்து, ஆய்ந்து கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கூடியவன் தான் மு.க.ஸ்டாலின். ஆகவே, சிறப்பான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

திடீரென பெய்த மழையால் விவசாயிகள் எந்த அளவுக்கு துன்பத்துக்கு, துயரத்துக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை. அதனால் தான் உடனடியாக ஈரோட்டில் இடைத்தேர்தல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், தேர்தல் பணியில் சில அமைச்சர்கள் ஈடுபட்டிருந்தாலும், நமது உடனடி தேவை அங்கே பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக வேளாண்துறை அமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்களுக்கு உடனடியாக செல்லவேண்டும் என்று உத்தரவிட்டு, உடனடியாக 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களை எல்லாம் சென்று பார்த்தார்கள். விவசாயிகளிடத்திலும் பேசினார்கள். நிவாரணம் என்ன வேண்டும்? என்பதை பற்றி ஆய்வு நடத்தினார்கள். அதிகாரிகளோடு சென்று அந்த பணியை நிறைவேற்றினார்கள். அதற்கு பிறகு நான் மத்திய அரசுக்கு முறையாக கடிதம் எழுதினோம். கணக்கெடுக்கக்கூடிய பணி தொடர்ந்து நடைபெற்று, இப்போது தரவு பதிவு (டேட்டா என்ட்ரி) செய்ய தொடங்கிவிட்டார்கள். இன்னும் ஒரு வாரத்தில், அந்த நிவாரணத்தொகை உங்கள் வங்கியில், உடனடியாக வரவு வைக்கப்படும் என்று உறுதியோடு சொல்ல விரும்புகிறேன்.

தேர்தல் நேரத்தில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். எதை நிறைவேற்றவில்லை? ஒன்று, இரண்டு நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய சூழ்நிலை. நிதி பற்றாக்குறை, நிதி மட்டும் முறையாக இருந்திருந்தால், அதை ஒழுங்காக நீங்கள் (அ.தி.மு.க.) அதைப்பற்றி கவலைப்பட்டு, ஒழுங்காக சேர்த்து வைத்திருந்தால், கஜானாவில் நிதியை வைத்திருந்தால், நாங்கள் இந்நேரம் அதையும் நிறைவேற்றி இருப்போம். ஆனால் கஜானாவை காலியாக்கிவிட்டு பெரிய கடனாளியாக அவர்கள் சென்ற காரணத்தினால்தான் அதையும் சமாளிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம். அதையெல்லாம் நாங்கள் சமாளித்து, ஓரளவுக்கு ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம். 85 சதவீத பணியை நிறைவேற்றிவிட்டோம். மிச்சம் இருக்கக்கூடிய அந்த 15 சதவீத பணிகளையும் விரைவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையோடு இருங்கள். அந்த நம்பிக்கையோடு எப்போதும் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.