தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக்குள் வருவதை கட்டுப்படுத்த லைசென்ஸ்: இலங்கை

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்வு ஒன்றை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் ஆண்டாண்டு காலமாய் எந்த பிரச்சனையுமே இல்லாமல் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்து வந்தனர். கச்சத்தீவு என்பது தமிழ்நாட்டுக்குள் இருந்தது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக இருந்தது. கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர் கட்டியதுதான் அந்தோணியார் தேவாலயம். ஆனாலும் தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கை தமிழ் மீனவர்களும் இணைந்து அந்தோணியார் தேவாலய திருவிழாவை நடத்துவது மரபு. இந்த திருவிழா என்பது இருதரப்பு மீனவர்களின் வாழ்வியலில் பிரதான அங்கமாகும். திருமண உறவை தீர்மானித்தல், பண்டமாற்று வர்த்தகம் என பல அம்சங்களைக் கொண்டதாக கச்சத்தீவு திருவிழா இருந்தது என்பது ஒருகாலம்!

கச்சத்தீவை என்று இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்ததோ அன்று முதல் இருதரப்பு மீனவர்களும் எதிரிகளாக்கப்பட்டுவிட்டனர். கச்சத்தீவு இலங்கையின் எல்லையாகிப் போனது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டது. இத்தனைக்கும் கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு மீனவர் உரிமை உறுதி செய்யப்பட்டும் இருந்தது. ஆனாலும் இலங்கை கடற்படையோ இதனை கிஞ்சித்தும் மதித்தது இல்லை. அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தில் இலங்கை நரவேட்டையாடியது என்பதுதான் யதார்த்தம். 1980களில் இருந்து இன்று வரை எல்லை தாண்டி மீன்பிடித்துவிட்டார்கள் என்ற ஒன்றை சொல்லியே 800 தமிழ்நாட்டு மீனவர்களை பச்சை படுகொலை செய்திருக்கிறது இலங்கை கடற்படை. இதுநாள் வரை இந்த இனப்படுகொலையை யாருமே கேட்கவில்லை.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை தொடர்பாக பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இப்பேச்சுவார்த்தைகளின் இறுதியாக, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் வகையில் லைசென்ஸ் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை சென்றிருந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தும் பேசினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து ஆலோசித்தோம் என்றார்.

இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக்குள் வருவதை கட்டுப்படுத்த லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய அமைச்சர்கள் வருகையின் போது இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்கு மீனவர்கள் (தமிழ் மீனவர்கள்) நலன்தான் முக்கியம். நமது நாட்டு மீன்வளத்தை ஆபத்து இல்லாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்குள் ஒரு குறிப்பிட்ட தொலைவு மீன்பிடிக்க லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக பேசி வருகிறோம். இதற்காக மீனவர்களிடம் பணம் பெறப்படும். எவ்வளவோ முறை முயற்சித்தும் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான படகுகள் வருவதால் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு அலி சப்ரி கூறினார்.