பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு கைதான சிறிது நேரத்திலேயே இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற கூடிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து விமானம் ஏறிய போது வீரர்களால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவருடன் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமானத்தின் முன்னே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே அசாம் காவல்துறையினரின் கைது நடவடிக்கை தொடர்பாக வந்த உத்தரவை அடுத்தே பவன் கேரா தடுத்து நிறுத்தப்பட்டதாக CISF வீரர்கள் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அசாம் காவல்துறை பவனை கைது செய்தது.
கடந்த 17ம் தேதி பிரதமர் மோடி, அதானி உறவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமரை நரேந்திர கவுதம் தாஸ் என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பிரதமரை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கைதான பவன் கேரா தனக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் ஒப்புக் கொண்டார். அதன் பேரில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வாய் தவறி பிரதமர் மோடியின் பெயரை பவன் தவறாக உச்சரித்ததாகவும், அதற்கென அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவன் கேராவுக்கு பிப்ரவரி 28ம் தேதி வரை இடைக்கால வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பவன் கேராவுக்கு எதிராக அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது தொடர்பாக அசாம் மற்றும் உத்தரபிரதேச காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார் பவன் கேரா. அப்போது அசாம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் விமானத்திலிருந்து பவன் கேரா இறக்கிவிடப்பட்டார். பின்னர் பவன் கேராவை அசாம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு இதே விமானத்தில் செல்லவிருந்த 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விமானங்களை புறப்படவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.