தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் அடிமையாக உள்ளார் என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் எம்.பி. கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் எம்.பி. நேற்று வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தார். வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவிலில் இருந்து பெரியவலசு செல்லும் பாரதிதாசன் சாலையில் அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருக்கு பலரும் தங்கள் வீட்டின் முன்பு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு ஆகியோர் இருந்தனர். பின்னர் அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிற்கிறார். அவர் எப்படிப்பட்ட சூழலில் வேட்பாளர் ஆனார். ஒரு தந்தை மறைந்து, அவருக்கு பின் மகன் பணியாற்றவருவது உண்டு. ஆனால், இங்கே மகனை இழந்து, அவர் செய்த பணியை நான் செய்கிறேன் என்று கனத்த இதயத்துடன் வேட்பாளராக நிற்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு இங்கு என்ன நடந்தது. அவர் இறந்ததும் கண்ணீருடன் பதவி ஏற்றார்கள். சோகத்தில் இருப்பதுபோன்று தாடி வைத்துக்கொண்டு அலைந்தார்கள். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார்ந்தார். ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருக்கிறது என்றார். இதற்கிடையே சசிகலா முதல்-அமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி பெயரை அறிவித்தார். 10 நாட்களில் அதே எடப்பாடி பழனிசாமி, வரம் தந்த சாமியின் தலையில் கை வைப்பதுபோல சசிகலாவுக்கே துரோகம் செய்தார். அவருக்கு முதலில் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி வைத்து ஆட்சியையும், கட்சியையும் பங்குபோட்டுக்கொண்டார். ஆட்சி போனதும், கூடவே இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் அடிமையாக உள்ளார். அவர் அடிமையாக இருப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு தமிழ்நாட்டு மக்களாகிய நம் அனைவரையும் அடிமையாக்கி வைத்திருக்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்கும் அஞ்சமாட்டோம். யாருக்காகவும் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று செயல்படுகிறார். தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றி, முதல்-அமைச்சர்களில் நம்பர் 1 முதல்-அமைச்சராக அவர் உள்ளார். ரூ.1,200 கோடி கொரோனா நிதி ரூ.4 ஆயிரம், நிவாரண பொருட்கள் என்று அறிவித்த அனைத்தையும் கொடுத்தார். ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. ஆனால், எடப்பாடி பழனிசாமி அவருடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என்று அனைவருக்கும் துரோகம் செய்தவர். தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர். அவருக்கு 27-ந் தேதி அளிக்கும் தீர்ப்பு முதல் அடியாக இருக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் கூறினார்.