ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஈரோடு இடைத்தோ்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் நிலையில் தோ்தல் பிரசாரம் நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 25) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் இத்தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்பட 77 போ் போட்டியிடுகின்றனா்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன் புகார் மனு மீது முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த கட்சியின் சட்டப்பிரிவு நிர்வாகி ஜெகதீஸ்வரன் நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு நடைபெறும் முறைகேடுகள், ஆளும் கட்சியின் அராஜகங்கள் பற்றி எந்த புகார் கொடுத்தாலும் ஏற்க அதிகாரிகள் தயாராக இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே மாநில தேர்தல் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.