ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
ஈரோட்டில் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு இப்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அனைத்து வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் களமிறங்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்ல வேண்டும் என்பதால் மூத்த திமுக அமைச்சர்கள் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இப்போது ஈரோடு கிழக்கில் காங்கிரஸ், திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். முதல்வரும் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். வேட்பாளர்களை அறிவித்த ஓபிஎஸ் தரப்பு மற்றும் அமமுக இருவரும் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் பல தேர்தல்களுக்குப் பின்னர், இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல இதில் தனித்து களமிறங்குகிறது. அக்கட்சியில் இருந்து மேனகா என்ற பெண் போட்டியிடுகிறார்.. பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு சர்ச்சையானது. சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பல இடங்களில் சீமான் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. அதேபோல ஈரோடு கிழக்கிலும் நாம் தமிழர் வேட்பாளர் பிரசாரம் செய்யவிடாமல் மோதல்கள் நடந்து வருகிறது. கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகச் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சியினர் பிரசாரம் செய்யும் இடங்களில் சீமான் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வ
சீமான் பேசியது குறித்து விளக்கமளிக்கவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இவை ஒரு பக்கம் இருக்கக் கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனு இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். தனக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் ஹெல்மெட் வழங்கக் கோரி மேனகா மனு அளித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி புதிய ரூட்டை பிடித்துள்ளது. அதற்கான சீக்ரெட்டை உடைத்துள்ளார் அக்கட்சியின் நிர்வாகி காளியம்மாள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கொடுத்து வரும் இலவச பொருட்களோடு வட்டமேசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காளியம்மாள் பேசியது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. அதில், அவர் ”வாழவே முடியாத அளவுக்கு 500 க்கும் 1000 க்கும் கையேந்த வைத்ததுதான் திராவிட மாடல். வடக்கர், ஆரியத்தை எதிர்த்து தண்டவாளத்தில் தலை வைத்தவர் கலைஞர். அனால் இன்று வடக்கர்களை பற்றி திமுக ஏன் பேசவே இல்லை.. பல்லாயிரம் பேர் ரயிலில் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றனர் ஏன் அவர்களுக்கு தடை விதிக்கவில்லை? இந்தி எதிர்ப்பு என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தில் திமுக அமர்ந்ததை போல, இந்திக்காரர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமரும்” என்று காளியம்மாள் கூறியுள்ளார்.