ஜெயலலிதா போட்டோவோடு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை சவுந்தரராஜன்!

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் உள்ள தமிழிசை சவுந்தரராஜன், ஜெயலலிதாவின் ஆளுமையை சுட்டக்காட்டி புகழ்ந்து பிறந்தநாள் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் கூட அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அதிமுகவினர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து வருகின்றனர். அதன்படி இன்று ஜெயலலிதாவின் பிறந்த தினமாகும். அதாவது ஜெயலலிதாவுக்கு 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அதிமுகவில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் மாநிலத்தில் பல இடங்களில்ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், அவரது போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகின்றனர். இதுதவிர பிற கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து வாழ்த்துகளை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரை நினைவு கூர்ந்து தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை.. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.