இது இபிஎஸ் தாத்தா கட்சியில்லை.. எம்ஜிஆர் கட்சி: ஓ.பன்னீர் செல்வம்

இது இபிஎஸ், ஓபிஎஸ் ஆரம்பித்த கட்சியில்லை தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதாக கூறவில்லை என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி பொதுக்குழு முடிவு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கூறியுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம். நியாயமும், நீதியும் எங்கள் பக்கம் இருக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி. தீர்மானம் பற்றி எதுவும் சொல்ல மாட்டோம் என்பது உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய மனோஜ் பாண்டியன், ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என எந்த வரியும் தீர்ப்பில் இல்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்குவதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நாங்கள் மக்களை நாடி செல்லும் நிலையில் இருக்கிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் அம்மா முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகிறதே? எனக் கேட்டனர். அதற்கு, பைத்தியக்காரர்கள் அப்படி சொல்வர். அரசியல்வாதிகள் அப்படி சொல்ல மாட்டார்கள் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம் கட்சியை தங்கள் உயிரை கொடுத்து வளர்த்து வந்துள்ளார்கள். இவர்கள் கொண்டு வந்த சட்ட விதியை காப்பாற்ற தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம். அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். இன்று வரை அப்படித் தான் இருக்கிறது. கட்சி தொண்டர்கள் வாக்களித்து தலைமையை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இன்றைய நிலை எப்படி இருக்கிறது. 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய, வழிமொழிய வேண்டும். அதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகியாக இருக்க வேண்டுமாம்.

எப்படி கூவத்தூரில் நடந்ததோ, அதுபோல இந்த கட்சியை கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சித்து வருகிறார்கள். இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி ஆரம்பித்த கட்சி அல்ல. பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. இதற்காகவே தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். இதற்கு விடிவு காலம் பிறக்கும் வரை போராடுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. கிறுக்கன் சொன்னா அதைப் போய் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே? எடப்பாடி அணி தான் ஏ டூ இசட் டீம். ஆணவத்தின் உச்சநிலையில் இருக்கிறார். அதை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்களிடம், மக்களிடம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.