கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த ஆளுநர் திட்டமிட்டு பேசுகிறார்: திருமாவளவன்

ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு பேசுவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்குக்கு கவிஞர் சி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். டி.எஸ்.நடராஜன், ஜீவா மணிக்குமார், ஜி.மனோகரன், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் த.அறம் நோக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.பொன்னவைக்கோ, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர். டாக்டர் ஏ.ஆர்.சாந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மொழி என்ற அடிப்படையில் நாங்கள் வெறுக்கவில்லை. அவர்கள் பிற மொழி பேசுபவர்கள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். நாம் தொடர்ந்து இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து போராடி வருகிறோம். நமக்கு முந்தைய தலைமுறையினரும் போராடினார்கள். நாமும் போராடுகிறோம். நமக்கு பிந்தைய தலைமுறையினரும் எதிர்ப்பார்கள். கையில் ஆட்சி உள்ளது என்பதால் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்தி மொழியை திணிக்கிறார்கள். ராஜாஜி காலத்தில் இருந்து இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி ஒரே நாடு, ஒரே மொழி என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வசதிக்காக மொழியை திணித்து வருகிறார்கள். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். அவன் எந்தந்த நாட்டில் ஆட்சி பீடத்தில் இருந்த போது ஆங்கில மொழியும் திணிக்கப்பட்டது. இதனால் தான் உலகில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுகிறது. ஜனநாயகத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் தான் ஆட்சியாளர்களாக உள்ளனர்.

இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை இருந்தால் அதே மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையும் உள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் குறைந்த சதவிகிதமாக உள்ளனர். ஆனால் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். உச்சநீதிமன்றம் உள்பட பல நீதிமன்றங்களில் பார்ப்பனர்கள் தான் அதிகமாக உள்ளனர். துணை வேந்தர்கள், ஆளுநர்கள், ஐ.டி துறை உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் அவர்களே அதிகமாக உள்ளனர். சமஸ்கிருதம் என்ற மொழி யார் பேசுகிற மொழி. சமஸ்கிருதம் எதற்கான மொழி.

7 முதல் 8 கோடி பேர் பேசும் மொழி தமிழ். ஆனால் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய மொழி சமஸ்கிருதம்.‌ பார்ப்பனர்களுக்காக சமஸ்கிருத மொழி இந்தியாவில் திணிக்கப்பட்டு வருகிறது. சமஸ்கிருதம் புராணங்களை பாதுகாக்க சமஸ்கிருத மொழி வேண்டும் என்றே திணிக்கப்படுகிறது. இந்து மதம் பாகுபாடுகளை கொண்ட மதம். இந்தியை விடவும், சமஸ்கிருதம் தான் அவர்களுக்கு முக்கிய நோக்கம். ஜனநாயகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பேசுபவர்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் ஒரே மொழி வேண்டும் என எண்ணி இந்தியை திணிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். காங்கிரஸ் இந்தி தேசம் என்று நிலையில் இருக்கிறது. ஆனால் பாஜக இந்து தேசம் என்ற எண்ணம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பாஜகவின் முதன்மையான நோக்கம் இந்தி இல்லை சமஸ்கிருத மொழி தான். அதற்கு முதலில் இந்தி திணிக்க வேண்டும். தமிழக ஆளுநர் டார்வின் கொள்கையை பேச கூடாது. ஆபிரகாம் லிங்கன் கருத்தை பேச கூடாது என ஆளுநர் பேசுவது ஏதோ சாதாரணமாக தானே பேசுகிறார் என எண்ண கூடாது. ஆளுநர் கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு பேசுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.