மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரக பிரசாந்த் லவானியாவை நியமித்து ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போதும் பேசு பொருளாக உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஜப்பான் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தான் இந்த மந்தம் என பாஜக சொன்னாலும், ஒன்றிய அரசு ஓரவஞ்சனை காட்டுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடக்கின்றன. இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட நிதியளவு குறித்த தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி சுவஸ்தயா ஸ்வரக்ஷா திட்டம் தொடங்கப்பட்ட 2014ம் ஆண்டுக்கு பின் திட்டமிடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன என கடந்த நவம்பர் 21ம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 17ம் தேதி மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளது. அதில் கூறிய தகவலில், 2014ஆம் ஆண்டு முதல், பிரதான் மந்திரி சுவஸ்தயா ஸ்வரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட 16 புதிய மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டு, அதன் திட்ட மதிப்பீடு தொகை, திட்டத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, திட்ட நிறைவும் தேதி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1,977 கோடி நிதி மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இதுவரை ரூ. 12.35 கோடிதான் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்ட 16 மருத்துவமனைகளில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குதான் அதிக நிதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டுக்கு பின் அறிவிக்கப்ட்ட இந்த 16 மருத்துவமனைகளில் உத்தரப் பிரேதேசத்தின் ரேபெரலி, ஆந்திராவின் மங்கலகிரி, மகாராஷ்டிராவின் நாக்பூர், உத்தரப்பிரதேசத்தின் கோரக்கபூர், பஞ்சாப்பின் பதிண்டா, ஹிமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்ப்பூர் இடங்களில் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், ஜம்மு, ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் இந்தாண்டு மார்ச், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவுபெற உள்ளன. தெலங்கானா எய்ம்ஸ் அடுத்தாண்டும், காஷ்மீர் எய்ம்ஸ் 2025ஆண்டும் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார், ஹரியானா மாநிலங்களில், மாநில அரசுகள் இலவச நிலங்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டை, தற்பொது வெளியாகிய தகவல்கள் உறுதிபடுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் தற்காலிகமாக செயல்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இயக்குநராக உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர். பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக இருந்த நாகராஜன் கடந்த ஜனவரி மாதம் காலமானதை அடுத்து, புதிய தலைவர் குறித்த அறிவிப்பை இன்று ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.