தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார். சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்து வாசித்தளித்த பிறகு, சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அந்த கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.
தேர்தல் கமிஷன், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பின்பு சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை குறித்த விவகாரத்தில் முடிவு செய்யப்படுவதாக நான் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், சட்டசபையில் அந்த பிரச்சினை பற்றி பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அது முடிவு பெற்ற விவகாரம். எனவே அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் இருக்கைகள் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. முடிந்து போன விவகாரம் என்பதால் அவர்கள் அதைப் பற்றி இப்போது எதுவும் கேட்கவில்லை, கேட்க மாட்டார்கள். சட்டசபையில் ஒரு நாள் அந்த பிரச்சினை பற்றி பேசினார்கள். சிறு சிறு மாற்றங்கள் செய்யும்படி கேட்டனர். அவர்களின் தேவைகள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பிரச்சினை பற்றி சட்டசபையில் பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது. சட்டசபையில் யார்-யார்? எந்த இருக்கையில் அமர வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதால் அதன்படி அனைவரும் உட்காருவார்கள். சட்டசபை எனது ஆளுகைக்கு உட்பட்டது. யார்-யாரை எங்கு அமரச் செய்ய வேண்டும் என்பது எனது உரிமை. அந்த அடிப்படையில்தான் அவர்களுக்கு தகுதியான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறுமா? என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அந்த கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும். கடந்த கூட்டத்தொடரில் சட்டசபை மாடத்தில் இருந்து வீடியோ எடுத்த விவகாரம் ஏற்கனவே அவை உரிமை குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்த குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.