தமிழக அரசு நிர்பயா நிதியை சரியாக செலவு செய்யலை: குஷ்பு

பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு என்ன செய்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்பு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குஷ்பு உடுத்தும் ஆடைகளை பார்க்கவே ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்திய போதே திமுகவில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவரது களப்பணி சிறப்பாக பேசப்பட்டது. கட்சியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் குஷ்புவிற்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பெண்களின் நலனுக்காக நான் குரல் கொடுப்பதை அறிந்து எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளனர். நாளைக்குத்தான் டெல்லிக்கு செல்கிறேன். பெண்களுக்கு மகளிர் ஆணையம் பற்றி முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பேச தமிழக பெண்கள் முன்வர வேண்டும். இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் வெளியே வர வேண்டிய அவசியமில்லை. உங்கள் பெயர் கூட வெளியே வராது உங்களை பாதுகாக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

நான் பாஜகவில் இருப்பதால் கட்சி ரீதியாக தேசிய மகளிர் ஆணையத்தில் வேலை செய்ய மாட்டேன். கட்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. மகளிர் ஆணையத்தின் தலைமை சொல்வதை கேட்டுத்தான் நாங்கள் நடப்போம். கட்சிக்கு அப்பாற்ற விசயங்களை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு என்று ஒரு விசாரணை இருக்கிறது. நாங்கள் விசாரணை நடத்தி யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போராடுவோம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எப்படி நியாயம் கிடைக்க போராட வேண்டுமோ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். கட்சி ரீதியாக நிச்சயமாக நாங்கள் ஈடுபட முடியாது.

நிர்பயா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை. பிறகு எப்படி கூடுதல் நிதி கேட்க முடியும். பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நிர்பயா நிதியை சரியாக பயன்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினைகள் வரும் போது அதை தீர்ப்பதற்கு நாங்கள் இருக்கிறோம். பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மாநில அரசு என்ன செய்து வருகிறது என்றும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம். அரசியல் பேசக்கூடாது கட்சிக்கு அப்பாற்பட்டு நான் செயல்படுவேன்என்றும் குஷ்பூ கூறியுள்ளார்.

தன்னைப்பற்றி அவதூறாக பேசிய நபரைப்பற்றி புகார் அளிக்க தேசிய மகளிர் ஆணையத்தின் படியேறினார் குஷ்பு. இன்று பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு நீதி கிடைக்க தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குஷ்புவிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.