சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது: கமல்ஹாசன்

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் என்ற புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று முதல் மார்ச் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கலைஞர் மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். நெருங்கிய நட்பு என்று சொல்ல முடியாது. ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் இருவருமே பலமுறை நிரூபித்துக் கொண்டும் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். இங்குள்ள குறிப்பு புத்தகத்தில் நான் எழுதி வைத்திருப்பது என்னவென்றால், ‘ஒரு மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக இருப்பதில் இருக்கும் சந்தோசம் நிறைய உண்டு என்றாலும் சவால்களும் நிறைய உண்டு’. சந்தோசத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று, படிப்படியாக தொண்டராக, இளைஞர் அணி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, இன்று தமிழகத்தின் முதல்வராக என்று படிப்படியாக உயர்ந்து வருவது என்பது அவரது பொறுமையை மட்டுமல்ல திறமையையும் காட்டுகிறது. பதட்டப்படாமல் இத்தனை ஆண்டு காலம் நான் இளம் கமல்ஹாசனாக சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே அவருக்கு தன் தந்தையின் செவி மிக அருகில் இருந்த போதிலும் தனக்கென்று அதை சொல்லிக் கொள்ளாமல், படிப்படியாக வரிசையில் நின்று வருவது போல் வந்து தன் திறமையினால் தன்னை நிரூபித்துள்ளார்.

சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் சரித்திரத்தை மாற்றி எழுத சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதுவும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதில் பெரிய ஆர்வம் காட்டும் பலர் இருக்கிறார்கள். அதற்கு சவால் விடுவது போல் நாம் நினைவுகூர்ந்து கொள்ள வேண்டும். அந்த ஒரு நினைவு தான் இது. இது இல்லையென்றால் ஆமாம் என்ற பெயரை மட்டும் தான் ஞாபகம் வைப்பார்கள். நல்ல செய்தி தபாலில் வரும், கெட்ட செய்தி தந்தியில் வரும் என்பார்கள். இது நல்ல செய்தி. அடிக்கடி தபால் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இதை ஒரு அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாமா? என்று எழுப்பிய கேள்விக்கு, அதைப்பற்றி பேச வேண்டியது இந்த நேரம் இது அல்ல. அதை இப்போது சொல்லக்கூடாது. சீன் பை சீனாகத்தான் கதையை நகர்த்த வேண்டும். கிளைமாக்சை இப்போது கேட்கக்கூடாது என்றார்.

தி.மு.க. கொள்கைகளுடன் நீங்கள் ஒத்துபோகிறீர்களா? என்ற கேள்விக்கு, ரொம்ப நாளாகவே ஒத்துப்போகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணியை பற்றி பிறகு சொல்கிறேன் என்று கூறினார்.

இந்த கண்காட்சி தொடக்க விழாவுக்கு தயாநிதிமாறன் எம்.பி., கவிஞர் ஜோ மல்லூரி முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்திருந்தார்.