தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன பெயர் பலகைகளில் தமிழில் தான் பெயர் எழுத வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்த வேண்டியதாக இருந்தால், பெயர்ப்பலகையில் தமிழில் பெரிய எழுத்தில் எழுதிவிட்டு, பிற மொழிச்சொற்களை சிறிய அளவில் பயன்படுத்தலாம் என்ற அரசாணை 1987-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசாணையில் கூறப்பட்டுள்ளதற்கு எதிராக அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் பெரிதாகவும், தமிழ் எழுத்துக்களை சிறிய அளவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் மொழியை அவமதித்து வருகின்றனர். எனவே அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்மொழியை முதன்மையாக எழுதியும், பிற மொழிகளில் அரசாணையில் கூறப்பட்டுள்ள அளவில் பெயரை எழுத வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்றாத பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பெயர் பலகைகளில் தமிழை பிரதானமாக பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை 4 மாதத்துக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இது சம்பந்தமாக உரிய அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, அரசாணையின்படி பெயர்ப்பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார். இந்த தகவல்களை மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை கமிஷனர் சுப்பிரமணியன் அரசு தரப்புக்கு தயார் செய்து கொடுத்து இருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த அபராதம் போதுமானதல்ல. இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. எனவே, அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், அரசாணைக்கு எதிராக தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.