புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடும்பத்தோடு தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். “மார்ச் 1 திராவிட பொன்நாள்’ முயற்சி.. முயற்சி.. முயற்சி.. அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து தொண்டர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். அண்ணா அறிவாலய வளாகத்தில், மரக்கன்று நட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். தனக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மஞ்சள்பையுடன், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
“மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக! என்றும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.