இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியுள்ளன. சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மேடையில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், பீகாரில் உள்ள பாஜகவினர் தமிழ்நாட்டில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சைலேந்திரபாபு விளக்கம் அளித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, “பாஜகவிற்கும், உண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் பொய்கள் மீண்டும் வெளிப்பட்டுவிட்டன. பொய், குழப்பம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை பரப்புவதே பாஜகவின் தொழில்” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். எனினும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற அவதூறு பிரசாரங்கள் தொடர்ந்து சிலரால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இடம் என்பது போல் பொய் தகவலை பரப்புகின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. அந்த பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர். இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.