வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் தமிழகத்தை விட்டு மன வருத்தத்தோடுசெல்லும் ஒரு நிலைக்கு அவர்களை தமிழர்களாகிய நாம் தள்ளிவிடக் கூடாது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழாவையொட்டி இன்று சமய மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நான் இங்கு வந்து சென்ற பின்னர் அரசியலில் பல்வேறு புதிய பொறுப்புகள் எனக்கு கிடைத்து வருகிறது. ஆன்மீகம் என்றாலே தமிழ் தமிழ் என்றால் ஆன்மீகம். தமிழர்களுக்கு தமிழில் பூஜை செய்யும் பழக்கம் இல்லை என்று பேசப்படுகிறது. அது உண்மை இல்லை. ஆண்டாள் பேசியதும் தமிழ் தான் சங்ககாலத்தில் இருந்து தொன்று தொட்டு இருந்து வருவதும் தமிழ் தான்.
மற்ற மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தை நாடி வேலை செய்ய வந்திருப்பவர்களை நாம் ஆதரிக்க வேண்டுமே தவிர அவர்களிடம் துவேசம் பேசக்கூடாது. ஏனென்றால் பாரத நாட்டை தமிழர்கள் மதிப்பவர்கள். நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நாம் மதிப்பது போல மற்றவரையும் மதிக்க வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கலாச்சாரத்தை நாம் மறந்து வருகிறோமோ என்று தற்போது தோன்றுகிறது. ஒரு சிலர் பரப்பி வரும் துவேஷ கருத்துக்களால் நம் தமிழர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள் தமிழகத்தை விட்டு மன வருத்தத்தோடுசெல்லும் ஒரு நிலைக்கு அவர்களை தமிழர்களாகிய நாம் தள்ளிவிடக் கூடாது. நம்மை நாடி வந்த அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் நாம் உரிய மதிப்பளித்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தெலுங்கானா, புதுச்சேரி மக்கள் என்னை ஒரு சகோதரியாகவும், மகளாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பே சிவம் என்று தான் இந்து மதம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. எனவே பிரிவினை வாதம் இல்லாமல் எல்லா மாநிலத்தவரையும் அரவணைத்து தமிழ் கலாச்சாரத்தோடு வாழ வேண்டும். ஏதோ ஒரு சிலர் விஷம கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புவதால் தமிழர்களின் பெருமை இந்திய அளவில் குறைத்து பேசப்பட்டு வருகிறது. எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு மக்கள் அவர்களை அங்கீகரித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.