வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக் கூடாது என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக திமுக வர்த்தக அணி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:-
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலை செய்வதற்காக தமிழ்நாடு வரும் வட இந்திய தொழிலாளர்கள் ரேஷனில் அரிசி வாங்கி கொள்ளலாம். கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். ஆனால் ஒருநாளும் வாக்காளர்களாக மாறி வாக்களிக்க அனுமதிக்க கூடாது. எங்கிருந்து வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்கு வரலாம். எங்கள் தொழிலை செய்யலாம். அவர்களின் உழைப்பை குறைத்து சொல்லவில்லை. ஆனால் தேர்தல் வந்தால், வட இந்திய தொழிலாளர்கள் வாக்களிக்க விரும்பினால் பீகாரில் இருந்து வந்தவர்கள் பீகாருக்கும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த உ.பி-க்கும் சென்று வாக்களியுங்கள். அதேபோல் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்கள், இங்கு வந்து வாக்களிக்கட்டும். அதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.