சென்னையில் நாம் தமிழர்- ஆதித்தமிழர் கட்சியினர் பயங்கர மோதல்!

அருந்ததியர் சமூகத்தினரை பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி தமிழர் பேரவை தரப்பு, போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் – ஆதி தமிழர் பேரவை ஆகிய இரு தரப்புக்கு மோதல் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் பிரசாரத்தின் போதும் நாம் தமிழர் கட்சியினருக்கு பல இடங்களில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அருந்ததியினர் பேச்சு சர்ச்சைக்கு ஆதித்தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அவர்கள் இதனை கண்டித்து சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்றுகாலை ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியுடன் போரூர் லட்சுமி நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்காடு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஆதி தமிழர் கட்சியினர் போலீசார் தடுப்பை மீறி நாம் தமிழர் கட்சி அலுவலகம் நோக்கி ஓடினர். அந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இருந்த ஏராளமான நிர்வாகிகளும் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆதித்தமிழர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் முன்னிலையிலேயே அவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டனர். கல், பாட்டில்களை வீசியும், கட்டையாலும் பயங்கரமாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். எனினும் குறைந்த அளவிலான போலீசார் இருந்ததால் உடனடியாக மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 30 பேரை கைது செய்தனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் மீது கல் வீசப்பட்டது. இதில் அலுவலகத்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது. இதையடுத்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் போரூர் உதவி கமிஷனர் ராஜீவ்பிரின்ஸ் ஆரோன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதலால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மோதல் நடந்தபோது கட்சி அலுவலகத்தில் சீமான் இல்லை. மோதல் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.