பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி, அத்தியவசியப் பொருட்களின் உள்ளிட்ட காரணிகளால் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு கவிழ்க்கப்பட்டது. ஆனால் அவர் உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியவில்லை என குறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா கூறிய நிலையில் இம்ரான் கான் அதை ஏற்க மறுத்தார். அதை தொடர்ந்து அவரது ஆட்சி அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கையால் கவிழ்க்கப்பட்டதாக இம்ரான் கான் கூறிவருகிறார். ஆனால் பொருளாதார நெருக்கடியை காரணமாக சொல்லி இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின்பும் நாட்டில் பொருளாதார மேம்பாடு ஏற்படவில்லை. மாறாக பாகிஸ்தானின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் இம்ரான் கானை கொல்லை சதி முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் மயிரிழையில் உயிர்தப்பினார் என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் பாகிஸ்தான் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்து வரும் இம்ரான் மீது டோஷகானா வழக்கு உள்ளது. ஆனால் அவர் பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இம்ரான் கானை கைது செய்ய நேற்று மதியம் அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அதை அறிந்த அவரது தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் தொண்டர்கள் மத்தியில் இம்ரான் கான் உரையாற்றினார். அபோது அவர் பேசும்போது, ‘‘ஒரு நாடு அநீதிக்கு எதிராக நிற்க முடியாதபோது, அது அடிமையாகிவிடும். இந்திய டிவி சேனல்களைப் பார்த்து, பாகிஸ்தான் ஏன் உலகம் முழுவதும் விமர்சிக்கப்படுகிறது என்பதைப் தெரிந்து கொள்ளுங்கள். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட உள்ள ஒரு தலைவர் பிரதமராக பதவியேற்றதால் பாகிஸ்தான் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜெனரல் பாஜ்வா அவரை காப்பாற்றி பிரதமராக்கினார். உள்துறை அமைச்சர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆசிப் சர்தாரி ஒரு திருடன் மற்றும் கொலைகாரன்.
உயர்மட்ட தலைவர்கள் குற்றவாளிகள் என்றால், நாட்டின் கதி என்ன? தவறுகளை எதிர்த்து நிற்க முடியாத நாடு அடிமையாகிவிடும். பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது. உலகம் முழுவதும் பாகிஸ்தான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தலைவர்கள் வெளியில் எவ்வளவு பணத்தை அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உலகுக்குத் தெரியும். எனவே யாரும் நாட்டுக்கு ஜாமீன் கொடுப்பதில்லை.
என்னைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆனாலும், நான் செல்லும் நீதிமன்றங்களில் பாதுகாப்பு இல்லை’’ என்று இம்ரான் கான் பேசினார்.
ஜாமினில் வெளி வராத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடதக்கது.