ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒருவர் மெரினாவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இந்த விவகாரத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு 47-ஆவது உயிரிழப்பு என்று அவர் காட்டமாகத் தனது டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பலரும் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளனர். மாநிலம் முழுக்க பலரும் இந்த ஆன்லைன் ரம்மியை விளையாடி வருகின்றனர். இதில் பலரும் தொடர்ச்சியாகப் பணத்தையும் இழந்து வருகின்றனர்.
முதலில் சிறு பணத்தை வெல்வது போல இருந்தாலும் கூட.. போகப் போக பெரிய நஷ்டமே ஏற்படும். விட்டதைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ச்சியாக விளையாடி ஒட்டுமொத்த சொத்தையும் இழக்கிறார்கள். இப்படிச் சேமிப்பை இழந்து கடன் வாங்கி விளையாடி அதையும் இழக்கும் நபர்கள், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது போல மாநிலத்தில் பல தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு, இதற்கான தடை மசோதாவும் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்னும் இதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆன்லைன் ரம்மி தொடர்ந்து விளையாடப்படுகிறது. இதனால் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மற்றொருவர் இப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சென்னை கேகே நகரில் வசித்து வந்த சுரேஷ், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் தொடர்ச்சியாகப் பணத்தை இழந்த இவர், ரூ.16 லட்ச ரூபாய் வரை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த போன அவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கடிதம் எழுதிவிட்டு மாயமானார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சுரேஷின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், பிராதே பரிசோதனைக்காக அனுப்பி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த விவகாரத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு 47-ஆவது உயிரிழப்பு என்று அவர் காட்டமாகத் தனது டுவிட்டரில் விமர்சித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
‘ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களைக் காப்பதற்காவது அதைத் தடை செய்யுங்கள்’ என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த எதார்த்தமும், வலியும் ஆளுநருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உரைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.