உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிப்பு தேதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இவர்கள் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ஆட்சி அமைந்து 20 மாதங்களை கடந்த நிலையில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இது பெரும் ஏமாற்றமே இல்லத்தரசிகள் மத்தியில் நீடித்து வந்தது. இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த சூழலில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தின வாழ்த்து செய்தியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
பெண்களுக்கான 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதை வரும் 2023-24ஆம் பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். மேலும் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்திற்கு முதல் கையெழுத்து. அதன்பிறகு மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தியது, அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியது, புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குதல், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்களுக்கு ஒதுக்கியது என பல்வேறு திட்டங்களை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல. இதுபோன்ற எண்ணற்ற புரட்சி திட்டங்களால் செய்து காட்டுவது தான் திராவிட மாடல் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம். ”பெண்ணடிமை திரூமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்பதை நன்கு உணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம். பெண்ணுரிமை காப்போம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்.
அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று பாலினச் சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.