கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய செந்தில்பாலாஜி ஆய்வு!

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை காலத்தில் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு பற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம். வருகின்ற மே மாதத்தில் 17,400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதில், தற்சமயம் 5 அனல் மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 7,99,124 மெட்ரிக் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த நிலக்கரியின் கையிருப்பு அளவு 1,82,555 மெட்ரிக் டன் மட்டுமே. இது சென்ற ஆண்டை விட, 6,16,569 மெட்ரிக் டன் கூடுதலாகும். கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நிலக்கரியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக மார்ச் 2023-ல் அதிக கொள்ளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியினை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது, தமிழ்நாட்டில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்சாரம் எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆண்டு தேர்வுகள் முடிவுற்ற பின் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.