கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைப் பிரிவுக்காக 71 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
சுகாதாரத்துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்துகாய சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய் பிரிவு, டயாலிசிஸ், இரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் 71.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 7.5.2022 அன்று “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 1,18,371 சதுர அடி பரப்பளவில் 71 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு கொண்ட சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வசதிகளுடன்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவு, கூழாங்கல் பதித்த நடைபயிலும் கூடம் மற்றும் இயன்முறை சிகிச்சைக் கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு வார்டுகள், செயற்கை கை, கால் தயாரிக்கும் கூடம் ஆகியவையும், 20 படுக்கைகளுடன் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு உயர்த்துதல், எக்கோ ஆய்வகம் அமைக்கப்படவுள்ளன. இதேபோல் மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங்குகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, நம்மை காக்கும் 48 திட்டப் பிரிவு, அனைத்துவித தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற மருத்துவப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது. இப்புதிய கட்டடத்தில் மின் தூக்கி வசதிகள், ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீத்தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சிக் கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ‘மார்ச் 8-ஆம் நாளான உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.3.2023) முகாம் அலுவலகத்தில் சந்தித்த காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல்துறையினர் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆர். திருநாவுக்கரசு இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.