ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று(புதன்கிழமை) இந்தியா வந்துள்ளார். ஆமதாபாத் வருகை தந்த ஆல்பனேசியை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அதிகாரிகள் பலரும் வரவேற்றனர்.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இன்று மாலை சபர்மதி ஆசிரமம் செல்கிறார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஹோலி பண்டிகையில் பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்துகொள்கிறார். பின்னர் நாளை(மார்ச் 9) மும்பையில் நடைபெற உள்ள இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை இரு தலைவா்களும் பாா்வையிடுகின்றனர். அதன்பின்னர் மார்ச் 10 ஆம் தேதி டெல்லி செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வா்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் பிரதமா்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார்.
ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.