என் அப்பாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன் என்று லாலு பிரசாத் யாதவ் மகள் ரோகிணி ஆச்சார்யா கூறியுள்ளார்.
பீகாரில் நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டு பலருக்கு ரெயில்வேயில் வேலை கொடுத்ததாக முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத்திடம் சி.பி.ஐ. நேற்று நேரில் விசாரணை நடத்தியது. டெல்லியில் இந்தியா கேட் அருகில் உள்ள பண்டாரா பார்க்கில் அமைந்துள்ள மகள் மிசா பாரதி இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிற லாலு பிரசாத் யாதவை விசாரிக்கவும் சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக நேற்று காலை 10.40 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 2 கார்களில் அங்கு சென்றனர். எறத்தாழ 2 மணி நேரம் லாலு பிரசாத் யாதவிடம் சில ஆவணங்களைக் காட்டி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து 12.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றனர். வீடியோ பதிவு லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, லாலு பிரசாத் யாதவுக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளித்து, புதுவாழ்வு அளித்துள்ள அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டார். அரசியல் தொடர்பின்றி, சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிற இவர் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-
இந்த நபர்கள் (சி.பி.ஐ.யினர்) அப்பாவை துன்புறுத்துகிறார்கள். இந்த துன்புறுத்தல் ஏதாவது சிக்கலுக்கு வழிவகுத்தால், டெல்லி அதிகார மையத்தை நாங்கள் சும்மா விட மாட்டோம். பொறுமை எல்லை கடந்து போகிறது. என் அப்பாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், நான் யாரையும் விட்டு வைக்க மாட்டேன். காலம் வலிமை வாய்ந்தது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த விசாரணை பற்றி அவரது மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவிக்கையில், “விசாரணை அமைப்புகள், பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக செயல்படுகின்றன. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறவர்களுக்கு உதவுகின்றன. இது வெளிப்படையான ரகசியம் ஆகும்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், “இன்று ராப்ரி தேவி துன்புறுத்தப்படுகிறார், லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைவணங்காததால் பல ஆண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், “எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து, துன்புறுத்துவது தவறானது” என குறிப்பிட்டார்.