சுயமரியாதைக்காகவே திமுக, காங்கிரஸில் இருந்து விலகினேன்: குஷ்பு

எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகினேன் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும், அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா அங்கீகரித்தது. அதன்படி இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனர். அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மகளிர் தினத்தன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இப்போது உள்ள குழந்தைகள், மகளிருக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். 24 மணி நேரமும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே மகளிரிடையே ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். வாட்ஸ் அப், இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பொதுவெளியில் பெண்களின் சவால்கள் பற்றிய கேள்விக்கு, பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு இருக்கிறது. சில இடங்களில் தவறான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் முன்னேறுவதால் மட்டுமே ஆணாதிக்கம் அதிகமாக வெளிப்படுகிறது. ஆண்களின் மனதிற்குள் உள்ள பயம் அதிகமாக இருக்கிறது. பெண்களுக்கு கீழ் வேலை செய்ய ஆண்கள் இன்னும் தயங்குகிறார்கள். பெண்களை சமமாக பார்க்கும் இந்த உலகமே அழகாக மாறும். சினிமா, அரசியல், ஐடி என்று அனைத்து துறைகளிலும் ஆணாதிக்கும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

அதேபோல், பெண்கள் மனதளவில் அதிக உறுதியை கொண்டவர்கள். பெண்களால் அதிக பணிகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதை முக்கியம். பெண்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமானது. பெண்கள் பற்றிய சமூகப் பார்வை மாற வேண்டும். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது சிறு வயது சம்பவத்தை பகிர்ந்தேன். எனக்கு தைரியம் கொடுத்ததே என்னுடைய மகள்கள் தான். இன்று வரை ஆண் என்ற கர்வத்திலிருந்து அவர்கள் வெளியே வரவே இல்லை. இடஒதுக்கீடு இருந்தும் பெண்களுக்கான வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. இதற்கு முன் இரு கட்சிகளில் இருந்து விலகி இருக்கிறேன். எனது அரசியல் பயணம் தொடங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன். எந்தவொரு பெண்ணிற்கும் சுயமரியாதை அவசியம். எனது சுயமரியாதை கேள்விக்குள்ளாகும் இடங்களில் இருந்து நான் எப்போதும் வெளியேறி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.