அதிமுக – பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை என்றும், தங்களின் கூட்டணி தொடர்வாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. இதனால் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எதிர்கொள்வது, பொதுச்செயலாளர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் கட்சிப் பணிகள் குறித்து விவாதித்தோம். பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை என்று தெரிவித்தார். பின்னர் பாஜகவுடனான மோதல் போக்கு பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து நேற்றே பேசிவிட்டோம். இதுபோல் எதிர்காலத்தில் இருக்காது என்று நம்புகிறேன். பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை. ஐடி விங் தரப்பில் சில பக்குவப்படாத கருத்துகள் பகிரப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தே வருகிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி. இது தொடரும். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு தாய் மற்றும் மனைவியை பற்றி அண்ணாமலை பேசிய கருத்து பற்றிய கேள்விக்கு, அது அவரின் தனிப்பட்ட கருத்து. யாரும் ஜெயலலிதாவை போல் வர முடியாது. அவரின் தாய், மனைவியை உயர்த்தி பேசுவது தனிப்பட்ட கருத்து. எங்கள் தலைவருக்கு நிகரானவர்கள் எங்கும் கிடையாது என்று கூறினார்.
அதேபோல், செந்தில் முருகனை ஓபிஎஸ் நீக்கியது பற்றிய கேள்விக்கு, ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை. அவர் ஒரு கடையை தான் நடத்தி வருகிறார். அதனால் அவர் கட்சியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. 99 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றிக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை தவிர்த்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார்.
தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி விவகாரம் பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மியை முழுமையாக தடை செய்ய வேண்டும். அதனால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதனால் அதிமுகவின் நிலைப்பாடு தடை செய்ய வேண்டும் என்பதுதான். திமுக அவசர அவசரமாக பதில் அனுப்பியதன் விளைவு தான் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மசோதா நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். தற்போது உடனடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மீண்டும் மசோதாவை அனுப்ப வேண்டும் என்று கூறினார்.