இந்தியா – பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சினை என்பது சுதந்திர இந்தியாவில் இருந்தே தொடர் கதையாகி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல், ராணுவத்தினர் அத்துமீறல், திடீர் தாக்குதல், அப்பாவிகள் பலி, ரகசிய ஆபரேஷன், போர் என பரபரப்பிற்கு பஞ்சமில்லை. சமீப காலமாக இந்தியா – சீனா எல்லை பிரச்சினை பெரும் தலைவலியாக மாறியது. இதுதொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நிலைமையை சுமூகமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. மறுபுறம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல் தொடர்பான வருடாந்திர ஆய்வறிக்கையை அந்நாட்டு உளவுத்துறை சமீபத்தில் சமர்பித்தது. அதில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் எந்த ஒரு சவாலையும் சமாளிக்கக் கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது. இனியும் அமைதி காக்காது. சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும். இந்த விஷயத்தில் சீன எல்லையும் விதிவிலக்கல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்களுக்கு இடமளிக்கும் வேலையை பாகிஸ்தான் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முழு ராணுவ பலத்துடன் எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும் வகையில் இந்தியா தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான், சீன எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டால் அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய அரசு முயற்சிக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெரிய அளவில் பதிலடி கொடுக்காது. தேவையான அளவிற்கு மட்டுமே பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும். இந்த நடவடிக்கையில் தற்போது மாற்றம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் எல்லை தாண்டி சென்று இந்திய ராணுவம் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளை இங்கே நினைவுபடுத்தலாம். புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலகோட் முகாமை இந்தியா விமானப்படை தாக்கி அழித்தது. இதேபோல் கிழக்கு எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவி தாக்க முயன்றனர். அப்போது இருதரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் தனது நிலையை வலுப்படுத்தும் வகையில் அதிகப்படியான வீரர்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.