ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இது கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. கொறடா விஜயதரணிக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கும்படி தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக இளங்கோவன் கூறும்போது, “அம்மையார் விஜயதரணியை நேரில் அழைக்காதது தவறுதான். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரை நிச்சயம் நேரில் சென்று அழைப்பேன் என்று கிண்டலாக கூறினார்.
இதற்கு பதில் அளித்து விஜயதரணி கூறியதாவது:-
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து இருக்க வேண்டும். அதற்காக ‘கொறடா’ என்ற அடிப்படையில் என்னிடமாவது சொல்லியிருந்தால் நானாவது அனைவரையும் அழைத்து இருப்பேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. அது ஏன் என்று புரியவில்லை. இதை கேட்டால் மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு கிடைத்தால் நேரில் அழைப்பேன் என்கிறார். அப்படி ஒரு வாய்ப்பு இளங்கோவனுக்கு மீண்டும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அவர் என்னை அம்மையார் என்று அழைத்துள்ளார். ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? கொறடா மீது பயம் தேவையில்லை. அந்த பதவி மீதான மரியாதை இருந்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.