என்.எல்.சி. நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது:-
கடலூர் மாவட்டம், வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் விவசாயிகளின் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்து சமன்படுத்துவதற்காக என்.எல்.சி. நிறுவனம் மேற்கொண்ட அத்துமீறல்களும், அதற்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளும் தேவையற்றவை. என்.எல்.சி.யும், மாவட்ட நிர்வாகமும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அச்சுறுத்துவதற்காகவே என்.எல்.சி., மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றைய (நேற்று முன்தினம்) நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவற்றை கடலூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் சமன்படுத்தப்பட்ட பெரும்பான்மையான நிலங்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அந்த நிலங்கள் 2006-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டவை என்று என்.எல்.சி. தரப்பில் கூறப்படுகிறது. அது உண்மை தான் என்றாலும் கூட, அவற்றுக்கு அப்போது அறிவிக்கப்பட்ட விலையான ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. அவற்றுக்கு கூடுதலாக அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை. அத்தொகையை வழங்காமலேயே ஏழை, நடுத்தர விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பது அதிகார அத்துமீறலின் உச்சமாகும்.
விவசாயிகளையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்.எல்.சி. நிறுவனத்துக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காகத்தான் நாளை (இன்று) கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை பா.ம.க. அறிவித்திருக்கிறது. இது என்.எல்.சி. நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. அடுத்து வரும் ஆண்டுகளில் பொதுமக்களின் வீடுகள், நிலங்கள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் நடத்தப்படும் போராட்டம் தான் இதுவாகும். நாளைய (இன்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகள், வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் வழக்கம் போல் இன்று பேருந்துகள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நெய்வேலியை சுற்றி உள்ள போலீஸ் உட்கோட்டங்களில் பாதுகாப்பு பணியில் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடையடைக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 8 போலீஸ் சூப்பிரண்டுகள்,11 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள சூழலில், கடலூர் மாவட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடலூரில் கடைகள், பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நள்ளிரவில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இன்று முழு அடைப்புக்கு அழைக்கப்பட்டு இருந்தாலும் 100 சதவீத பேருந்துகள் மாவட்டத்தில் இயக்கப்படுகின்றன. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீதம் இயங்குகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.