எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் மீது ரத்தக்காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எம்.வையாபுரிபட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவர் அ.ம.மு.க. நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து பஸ்சில் வெளியே வந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து அவதூறாக பேசினார். இதனை கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் மீது ரத்தக்காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஸ்வரன் மீது புகார் செய்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியை திட்டமிட்டு அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து உள்ளார். அதன்பேரில் ராஜேஸ்வரன் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பு புகார் தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் ராஜேஸ்வரன் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அவனியாபுரம் காவல்துறை உதவி ஆணையர் செல்வகுமாரை நேரில் சந்தித்து திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
ஒரு கட்சியின் தலைவருக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு, எத்தனை உயிர்களை காப்பற்ற போகிறது எனத் தெரியவில்லை. கொலை, கொள்ளை என பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சில விஷயங்களில் இந்த காவல்துறை மிகவும் துரிதமாக செயல்படுவதை நாம் அறிந்திருக்கிறோம்.
இதே மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரும் போது அவர் மீது அவதூறு கருத்துகளை முன்வைத்து காலணி வீச முயன்றார்கள். இதுதொடர்பாக யாரும் புகார் கொடுத்ததாக தெரியவில்லை. பெண்கள் உள்ளிட்ட 5, 6 பேரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுத்தனர். அப்படியெனில் எடப்பாடி விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விஷயத்தில் நீதித்துறையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்ற சூழல் காணப்படுகிறது. எடப்பாடியார் கடும் விமர்சனக் கருத்துகளை முன்வைத்து வருகிறார். இதனால் ஏ டீம், பி டீம் ஆகியவற்றை வைத்து கொண்டு இதுபோன்று திமுக செய்கிறது. முன்னாள் முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் தொண்டர்களின் நிலையை எண்ணி பாருங்கள் என அச்சுறுத்தும் வகையிலேயே இப்படி செய்கின்றனர். இதற்கு காவல்துறையும் துணை நிற்கிறது. இந்த விவகாரத்தில் அதிமுக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. யாரிடம் ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூட ஆலோசனை கேட்கலாம். தென் தமிழகத்தில் எடப்பாடியாருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக இப்படிப்பட்ட வேலைகளை செய்யலாம். இவ்வாறு ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.