எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் அவதூறாக பேசிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியான லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் வேகமாக வந்து செல்போனை பறித்தார். பின்னர் பேருந்தில் இருந்து கீழே இறக்கி, ராஜேஸ்வரனை அதிமுகவினர் சரமாரியாக தாக்கினர். பின்னர் விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த நபர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்தது. சிங்கப்பூரில் கட்டட வேலை செய்து வரும் இவர், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதற்காக விமானம் மூலம் மதுரை வந்திறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் அணி செயலாளர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் மீதும், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ராஜேஸ்வரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறியதாவது:-
சிவகங்கை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று புறப்பட்டு மதுரை வந்தார். விமானத்தில் இருந்து பேருந்தில் ஏறி விமான நிலையம் வரை வருகை புரிந்தார். அப்போது முன்னாள் முதல்வரை, எதிர்க்கட்சி தலைவரை ஒருமையில் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை ஊடகங்களில் நேற்றைய தினம் ஒளிபரப்பினீர்கள். எவ்வளவு அசிங்கமாக பேச முடியுமோ, அந்த அளவிற்கு பேசி இருக்கிறார். எந்த ஒரு மனிதரும் உணர்ச்சி வசப்படுவீர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பொறுமையாக இருக்கிறார். அந்த நபர் சொல்வதை எல்லாம் கேட்காதது போல் நிற்கின்றார். இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து கூச்சல் போடுகிறார்.
மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவருக்கு இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு அரசுதான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு சட்டத்தை காக்க வேண்டிய அரசே காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் நாளை பொய் வழக்கு பதிவு செய்த தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.