12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழ் மொழித் தேர்வு (மார்ச் 13), ஆங்கில மொழித் தேர்வு (மார்ச் 15), கணினி அறிவியல் (மார்ச் 17), இயற்பியல் (மார்ச் 21), கணிதம் (மார்ச் 27), உயிரியல் (மார்ச் 31), வேதியியல் (ஏப்ரல் 3) என தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நெருக்கடியால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. இந்த சூழலில் நடப்பாண்டிற்கான பாடத்திட்டத்தில் பாட அளவு குறைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளன. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். வழக்கமாக பொதுத்தேர்வு வந்துவிட்டாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவும். அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகள், மதிப்பெண்கள் என்பதால் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இது சில நேரங்களில் தவறான தாக்கத்தை உண்டாக்கி விடுகிறது. எனவே மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுத்து சிறப்பான முறையில் தேர்வு எழுத வைக்க வேண்டும்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பிற்குரிய 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளே.. அனைவருக்கும் என் அன்பு வணக்கம். என்ன பரீட்சை டென்ஷனில் இருக்கீங்களா? ஒரு டென்ஷனும் வேணாம். எந்த பயமும் வேண்டாம். இது ஜஸ்ட் இன்னொரு பரீட்சை. அவ்வளவு தான். அப்படித்தான் இதை நீங்கள் அணுகணும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்க படிக்கிற புத்தகத்தில் இருந்து தான் வரப் போகுது. அதனால உறுதியோட அப்ரோச் பண்ணுங்க. உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், உறுதியும் தான். அது இருந்தாலே நீங்க பாதி ஜெயிச்சிட்டீங்க.

தேர்வுன்றது உங்களை பரிசோதிக்கிறது அல்ல. உங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போறது. உயர்த்தி விடுறது. அதனால் மீண்டும் சொல்றேன். எந்தவிதமான தயக்கமும் இல்லாம தேர்வுகளை எதிர்கொள்ளுங்க. தேர்வை பாத்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படிங்க. புரிஞ்சு படிங்க. விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்க. அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போல நானும் காத்திருக்கேன். முதல்வரா மட்டுமில்ல. உங்க குடும்பத்துல ஒருத்தரா வாழ்த்துறேன். ஆல் தி பெஸ்ட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.