நெய்வேலியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் தங்கியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காவல்துறையின் டெம்போ ட்ரவலர் வேன் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. பேட்டரி கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிறுவனம் விரிவாக்க பணிக்காக நிலங்கள் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9 ஆம் தேதி விரிவாக்க பணியை தொடங்கியது. புதுவையில் எதிரொலிக்கும் பாமகவின் பந்த்.. பேருந்துகள் கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்தம் முழு அடைப்பு போராட்டம் ஆனால் வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார். இதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவானதால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் சுமார் 197 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 10 மாவட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் நேற்று இரவே திரும்பி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அங்கு காவல்துறை வேனும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த வேன் திடீரென்று தீ பிடித்தது. இதை அப்பகுதியாக சென்ற மக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெளியே வந்து பார்த்த காவல்துறையினர் உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த வாகனத்திற்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது பேட்டரி கசிவு காரணமாக தீ பிடித்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வடக்குத்து பகுதியில் உள்ள கடைகளை மூட சொல்லியதாக 75 பேரை நேற்று போலீசார் கைது செய்து இருந்தனர். இதில் 70 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.