எம்பிக்களுக்கு இப்போது மதிப்பே இல்லை: திருமாவளவன்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு இப்போது மதிப்பு இல்லை எனக்கூறினார்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று திருமாவளவன் பங்கேற்றார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு மரியாதை என்பது இல்லை என்ற வேதனையை அவர் பகிரங்கமாக மேடையிலேயே பகிர்ந்து வேதனைப்பட்டார். இதுபற்றி திருமாவளவன் எம்பி பேசியதாவது:-

ஒரு காலத்தில் எம்பிக்களின் கையெழுத்துக்கு அதிக மரியாதை இருந்தது. பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டன. அப்போது ஒரு கையெழுத்துக்கு ரூ.25 வாங்கி கொண்டு தான் கையெழுத்திடுவார்கள். ஒரு நாளைக்கு 250 முதல் 300 கையெழுத்துகள் வரை போடுவார்கள். நான் வெற்று காகிதங்களில் கூட கையெழுத்து போட்டுள்ளேன். ஏனென்றால் என்னை மீறி என்ன நடந்து விடப்போகிறது?.

இதற்கு முன்பு எம்பி கையெழுத்திட்டால் தொலைபேசி இணைப்பு, கேஸ் இணைப்பு, பெட்ரோல் பங்க் உரிமம் கிடைக்கும். கலெக்டர் பணி கொடுப்பார். எம்பி அனுப்பி உள்ளார் என அவர் வேலை வழங்குவார். ஏனென்றால் எம்பிக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. ஆனால் இப்போது எம்பி என்றால் தம்பி என்கின்றனர். எந்த மரியாதையும் இல்லை. இப்போது எந்த அரசு வேலைக்கு சென்றாலும் ரெக்ரூட்மென்ட் முறை தான் உள்ளது. இதனால் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.