தைவானை ஆக்கிரமிக்க நினைக்கும் சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை அடிபணிய வைக்க, உக்ரைன் மூலம் அமெரிக்கா போர் தொடுத்து வருகிறது. நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்கி, அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை அனுப்பி போரில் ஈடுபடுகிறது அமெரிக்கா. அதேபோல் தற்போது தைவானிலும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சீனாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அரசப்படைகள் வெளியேறி உருவாக்கியது தான் தைவான் எனும் நாடு. ஆகவே வரலாற்று ரீதியாக தைவானும் சீனர்களின் நாடு தான். வெவ்வேறு நாடுகள் என்றாலும் மக்கள் ஒன்று தான். இத்தகைய சூழலில் அங்கு மூக்கு நுழைத்த அமெரிக்கா தைவனை சீனாவிற்கு எதிராக திருப்பி வருகிறது. ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் தைவானுக்கு அமெரிக்க சபையின் நான்சி பெலோசி பயணம் செய்தது சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான விரிசலை அதிகப்படுத்தியது.
இந்தநிலையில் தைவானின் முற்றுகையை உடைக்க சீன போர்க்கப்பல்களை அமெரிக்கா மூழ்கடிக்க வேண்டும் என்று அமெரிக்க பசிபிக் விமானப்படையின் (PACAF) தளபதி ஜெனரல் கென்னத் வில்ஸ்பாக் கூறியதாக தைவான் செய்திகள் தெரிவித்துள்ளன. கொலராடோவின் அரோராவில் நடைபெற்ற விமான மற்றும் விண்வெளிப் படைகள் சங்கத்தின் போர் சிம்போசியத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் வில்ஸ்பாக், ” தைவானை முற்றுகையிட்டுள்ள சீனாவின் போர்க் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடிக்க வேண்டும். ஆயுதமேந்திய ட்ரோன்கள் மற்றும் நார்த்ரோப் க்ரம்மன் B-21 ரைடர் எங்கள் பணிக்கு உதவியாக இருக்கும். தைவானை சீனா ஆக்கிரமிப்பதில் இருந்து தடுப்பதே அமெரிக்காவின் முன்னுரிமை என்றாலும், தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ராணுவம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீனாவின் போர் கப்பல்களை மூழ்கடித்தாக வேண்டும். சீனப் போர்க்கப்பல்களை மூழ்கடிப்பது மட்டும் அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கக்கூடாது. அமெரிக்காவும் நட்பு நாடுகளின் ராணுவமும் இணைந்து இன்னும் பலவற்றைத் திட்டமிட்டுப் பயிற்றுவிக்க வேண்டும். பல தீவுகளில் பல குழுக்கள் மற்றும் விமானங்களை பரப்புவதற்கான அமெரிக்க விமானப்படையின் தந்திரத்தை எனது கட்டளையின் கீழ் உள்ள பல பிரிவுகள் ஒத்திகை பார்க்கின்றன’’ என ராணுவ தளபதி கூறியுள்ளார்.