மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்: ஆர்.பி. உதயகுமார்

அமமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுக நடத்திய போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள் என்று பேசியுள்ளார்.

சிவகங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேருந்தில் அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் முழக்கமிட்டார். “துரோகத்தின் அடையாளம். சின்னம்மாவிற்கு துரோகம் பண்ணியவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்.” எனக் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார் ராஜேஸ்வரன். அதை பேஸ்புக்கில் அவர் லைவ் செய்வதை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் செல்போனை வேகமாக பறித்தார். உடனே அதிமுகவினர் பேருந்தில் இருந்து ராஜேஸ்வரனை கீழே இறக்கி தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜேஸ்வரன் மீது விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜேஸ்வரனை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைக் கண்டித்து மதுரையில் நேற்று காலை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

திமுகவின் பி டீம் துரோகிகள் சிவகங்கை பொதுக்கூட்டத்துக்கு எதிராக இணைந்து செயல்பட்டார்கள். திமுக அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. நெஞ்சுறுதி இல்லாத, கருணை அற்ற, சட்டம் தெரியாதவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதிமுகவின் புகாரை ஏற்காமல் ஊர் பேர் தெரியாத புறம்போக்குகள் கொடுத்த மனுவை ஏற்று வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். அதிமுக மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மதுரையிலேயே மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள். சிறை செல்ல பயந்தவர்கள் அல்ல மதுரை அதிமுகவினர்.

காவல்துறை நேற்று வரை எங்கள் மீது அன்போடு இருந்தார்கள். இன்று உங்களுக்கு அன்பாக இருப்பார்கள். நாளை எடப்பாடி ஆட்சியில் எங்களுக்கு அன்பானவர்களாக இருப்பார்கள். அதிமுகவுக்கு ஸ்டாலின் பூச்சாண்டி காட்ட வேண்டாம். விரைவில் ஸ்டாலின் கோட்டையில் இருந்து வீட்டு செல்வார்கள். எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு வீட்டில் இருந்து செல்வார். இவ்வாறு அவர் பேசினார்.