16 மீனவா்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீா்செல்வம் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட , தமிழக மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து ஓ.பன்னீா்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மீனவா்கள் 12 போ், இலங்கை கடற்படையினரால் மாா்ச் 12-இல் கைது செய்யப்பட்டுள்ளனா். அதே நாளில், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தை சோ்ந்த மீனவா்கள் 4 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்திய எல்லையைக் கடந்து மீன் பிடிக்காத போதும், தமிழக மீனவா்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இலங்கை கடற்படையினா் இவ்வாறு தமிழக மீனவா்களைத் தொடா்ந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், தமிழக மீனவா்கள் அவா்களுடைய பாரம்பரிய மீன் பிடி பகுதியில்கூடிய அமைதியாக மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, 16 மீனவா்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.